NGO notices

 

வயதானவர்களின் நிலை என்ன?

 இன்னும் சில வருடங்களில் கூட்டுக்குடும்பம் என்பது புத்தகங்களில் மட்டுமே பார்க்கப்படும் ஒரு விசயமாக மாறப்போகிறது.

இது கூட்டுக்குடும்பம் சரியா தவறா என்பது பற்றியல்ல, கூட்டுக் குடும்ப முறை கலைந்ததால் பாதிப்பிற்குள்ளான பெற்றோர்கள், வயதானவர்கள் நிலை குறித்த கட்டுரை.

கூட்டுக்குடும்ப முறையில் சில மனத்தாங்கல்கள் இருந்தாலும் பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள் வாழப் பிரச்சனையில்லாமல் இருந்தார்கள். தற்போது தனிக் குடும்பம் ஆனதால் இறுதிக் காலத்தில் யாரிடம் இருப்பது?!! என்ற பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.


மகன்

மகன் இருக்கும் வீடாக இருந்தால், இந்தத் தலைமுறை வயதானவர்களுக்குப் பிரச்சனை இருக்காது. தற்போதே புறக்கணிப்புகள் நடந்து கொண்டு இருப்பதைக் கவனித்து இருப்பீர்கள். நாளைடைவில் தொடர்ந்து அதிகரிக்கும்.

உடலில் வலு இருக்கும் வரை பெற்றோர்கள் இருவரும் தனியாகச் சமாளிக்க முடியும் ஆனால், ஒரு கட்டத்தில் உடல் பலகீனமாகும் போது தனது மகனை சார்ந்து இருக்க வேண்டியது உள்ளது.


ஒன்றுக்கும் மேற்பட்ட மகன்கள் இருந்தால், யார் கவனித்துக் கொள்வது?!! என்ற பிரச்சனை வரும்.

மகன்களுக்குள் ஒற்றுமை இருந்தால் இந்தப் பிரச்சனையில்லை ஆனால், ஒற்றுமை என்பது அதிசயமான ஒன்றாகி விட்டது.


ஒரு மகன் இருந்தாலும், வரும் பெண் தனிக் குடித்தனம் செல்லவே விரும்புவார், இது சிக்கலை ஏற்படுத்தும். ஒருவேளை கூட்டுக் குடித்தனம் என்றால், அதற்குத் தகுந்த மாதிரி அனுசரித்துப் போக வேண்டும்.

சில பெற்றோர்கள் புரிந்து கொள்ளாமல் பிரச்சனை செய்வதாலும் ஈகோ காரணங்களாலும் சண்டை வருகிறது. மருமகளை மற்றும் அவர்களின் நடைமுறைச் சிக்கல்களை உணராமல்  நெருக்கடிகளைக் கொடுப்பதால், வெறுப்பிற்கு ஆளாகிறார்கள்.


விலைவாசி உயர்ந்து வரும் வேளையில் செலவுகளைக் கட்டுப்பாட்டினுள் வைக்க வேண்டும். இல்லையென்றால் இதுவே புறக்கணிப்பிற்கு முக்கியக் காரணியாகி விடும்.

பிள்ளைகளுக்குத் தாங்கள் செய்யும் செலவுகள் அனைத்தும் நியாயமானதாகவும், பெற்றோர்கள் தாத்தா பாட்டிகளின் செலவுகள் தேவையற்றது என்பது போலவும் தோன்றும். வயதானவர்கள் இனி அனுசரித்துப் போனால் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற நிலையுள்ளது.


இந்த நடைமுறை   எதார்த்தங்களை     உணர்ந்து கொண்டால்   தொடர முடியும், இல்லையென்றால் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்க வேண்டும்.

சுருக்கமாகத் தன்மானத்தை விட்டு சில நேரங்களில் இருக்க வேண்டியது வரும்.

மகனுக்கு, அம்மா / அப்பா Vs மனைவி என்ற இருவரை சமாளிக்க வேண்டிய நிலை வருவதால், இருவரையும் சமாளிக்க முடியாமல், பணிச் சூழலுடன் மன அழுத்தம் அதிகரிக்கும் போது பெற்றோரை கைவிட வேண்டிய சூழல் அல்லது அருகிலேயே வேறு வீடு பார்த்துத் தனிக் குடித்தனம் அல்லது முதியோர் இல்லம் என்று முடிவுகள் மாறலாம்.


மகள்

மகளை வைத்து இருப்பவர்கள், மகள் திருமணம் ஆகிச் சென்ற பிறகு வயதான காலத்தில் சமாளிப்பது என்பது கடினம்.

முன்பு விவசாயம் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அதில் எதோ சுமாரான வருமானம் வந்து கொண்டு இருந்தது, சமாளித்துக்கொண்டு இருந்தார்கள் ஆனால், தற்போது விவசாயம் தனது மூச்சை நிறுத்திக்கொண்டு வருகிறது.


எனவே, ஒரு கட்டத்திற்கு மேல் வாழ்க்கையை ஓட்ட வருமானம் இருக்காது, அதோடு உடலில் வலுவும் இல்லை என்ற நிலையானால் யாருடைய ஆதரவாவது தேவை. செலவுகள் கண்டபடி உயர்ந்து கொண்டு செல்கிறது. நாளைய விலைவாசியைக் கற்பனையும் செய்ய முடியவில்லை.

தற்போது சில பெண்கள் (உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லையென்றால்) திருமணம் ஆன பிறகு தனிக் குடித்தனம் வந்தால்,       தங்களது   பெற்றோரையும்       உடன் அழைத்து வர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார்கள் அல்லது நெருக்கடி தருகிறார்கள்.

இது போன்ற நிலை ஏற்பட்டால் பெண்ணின் பெற்றோர்களுக்குப் பெரிய சிக்கல் இல்லை.

ஒருவேளை இதற்கு அவரது துணை “நான் மட்டும் எங்க அம்மா அப்பாவை விட்டு வரணும் ஆனால், நீ அழைத்து வைத்துக்கொள்ளனுமா?” என்று மறுத்தால் சிக்கலாகும்.

இறப்பு


இவையெல்லாவற்றையும் விடப் பெரிய பிரச்சனை கணவனோ மனைவியோ இறந்தால் ஏற்படும் மோசமான தனிமை மற்றும் சாப்பாடு போன்ற நடைமுறை சிக்கல்கள்.

கணவன் இறந்தால், மனைவியால்  சமாளிக்க முடியும் ஆனால், அதே மனைவி இறந்தால் கணவன் நிலை மிகப் பரிதாபம்.

தற்போது இள வயதில் உடலில் வலு, கையில் பணம் இருக்கும் தைரியத்தில், வயது காரணமாகப் பேசித் தீர்க்கக் கூடிய சின்னப் பிரச்சனைகளுக்குக் கூடப் பிரிந்து விடுகிறார்கள். ஆணோ பெண்ணோ துணை இல்லாமல் இருப்பதன் வலி 45 – 50 வயதுக்குப் பிறகு தான் தெரியும்.

தனிமை

தனிமை மிகக் கொடுமை. தனிமையில் உள்ளவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால், பார்த்துக்கொள்ளக் கூட ஒருவரும் இல்லாது, பழக்கமான நபரின் உதவியை எதிர்பார்க்க வேண்டி வரும்.  அவர்களும் துவக்கத்தில் உதவுவார்களே தவிர… தொடர்ச்சியாகக் கவனிக்க முடியாது.

உடல் நிலை சரியில்லையென்றால் ஒருவரின் துணை ரொம்ப அவசியம். மருந்து கூட நாமே சமாளிக்கலாம் என்றாலும் சாப்பாடுக்கு என்ன செய்வது? நாளைக்கே மயக்கம் போட்டு விழுந்து விட்டால், யாருக்குத் தெரியும்?

தனியாக இருப்பது என்பது 45 வயதிற்கு மேல் சவாலான விஷயம் குறிப்பாக ஆண்களுக்கு. தனியாக இருந்தால், கண்டதையும் நினைக்கத் தோன்றும்.

வேறு வழிகளில் தங்கள் மனதை திருப்பிக் கொள்கிறவர்களுக்குப் பிரச்சனையில்லை ஆனால், நினைத்துப் புலம்பிக்கொண்டு இருந்தால், மன உளைச்சல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படும்.

பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் பிழைப்புத் தேடி தங்களை விட்டு பிரியும் போது மிகவும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.

பார்த்துக் கொள்ள யாரும் இல்லை, வருமானம் இல்லை என்ற நெருக்கடியான நிலை வரும் போது மன அழுத்தம் அதிகரிக்கும். ஒவ்வொரு செலவிற்கும் எதிர்பார்த்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இனி இது போல நிலை தான் வரப் போகிறது. வெளிநாடுகளில் ஆதரவற்ற வயதானவர்கள் நிறைய இருப்பது போல நிலை விரைவில் நம் இந்தியாவிலும் அதிகரிக்கும்.

நடைமுறை எதார்த்தம்

பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ இது தான் நிதர்சனம்.

எனவே, பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் கவலையில்லை ஆனால், அதே வேறு மாதிரி நிலை என்றால் அதற்குத் தகுந்த மாதிரி தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும், மனதை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

எதிர்காலத் தேவைகளுக்கு / செலவுகளுக்குச் சேமிப்பை உறுதி செய்ய வேண்டும்.

பெற்றோரும் நடைமுறை பிரச்சனைகள், பிள்ளைகளின் பண நெருக்கடி, செலவுகள், பணிச் சூழல்கள், உறவுக்குள் ஏற்படும் மனத்தாங்கல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அனுசரித்துச் செல்ல வேண்டும், இல்லையென்றால் மன அழுத்தமும் ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சும்.

கேட்க கசப்பாக இருந்தாலும் இது தான் உண்மை.

கூட்டுக்குடும்ப முறை அழிந்ததால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் வயதானவர்களும், வருமானம் இல்லாத பெற்றோர்களும் தான். இவர்களின் நிலை தான் கேள்விக் குறியாகியுள்ளது!

குழந்தைகள், தாத்தா பாட்டிகளின் அன்பையும் அவர்களின் அறிவுரையையும் இழந்து விட்டார்கள் என்பது இக்கட்டுரைக்குச்  சம்பந்தமில்லா கூடுதல் தகவல்.

நம்மை வளர்த்த பெற்றோர்களையும், பாசம் காட்டிய தாத்தா பாட்டிகளையும் புறக்கணிக்காதீர்கள், குறிப்பாக மரியாதைக் குறைவாக நடத்தாதீர்கள். அதே போலப் பெரியவர்களும் பிள்ளைகளின் நிலை உணர்ந்து அனுசரித்துச் செல்லுங்கள்.

நீங்கள் தற்போது எப்படி நடந்து கொள்கிறீர்களோ அதே தான், நாளை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளால் நடக்கும்.

இந்தக் கட்டுரை யாரையும் குறை கூறவோ, பயமுறுத்தவோ எழுதப்படவில்லை. அவரவர் பொறுப்பு உணர்ந்து அதன் படி நடந்து கொள்ளுங்கள்.

Popular Posts

corona virus india - INDOOR GAMES IN LOCKDOWN PERIODS

Contact Us - Where are we

stay home stay safe

financial assistance for photographers

Financial Help for ISCHEMICHEART DISEASE treatment

useful websites for blind

NGO/Trust Consultancy

volunteers

Donation links